வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு - உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத் தலைவர் வாராகி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் எந்த வகையான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், ஊர்வலங்களும் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடந்து வருவதையடுத்து, காவல்துறைக்கு எதிராக வாராகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் காவல்துறை டி.ஜி.பி. தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தமிழகத்தில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு காவல்துறை அனுமதி அளிக்காத போது, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 1,241 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story