தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆயத்த பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆயத்த பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2020 6:22 AM IST (Updated: 10 Dec 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆயத்த பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக 5 லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு போடுவதற்கு திட்டம் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் கூறினார்.

சென்னை, 

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை தமிழகத்துக்கு அனுப்புவதற்கு முன்பாக, முதற்கட்டமாக யார்-யாருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளோம். 

அந்தவகையில், கொரோனா முன்கள பணியாளர்களான அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்ட 5 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், பின்னர் 50-வயதுக்கு குறைவான இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.

மேலும் இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கு 46 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் வந்ததும், இதனை சேமிக்க 51 இடங்களில், நடந்து செல்லும் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்தகட்டமாக தடுப்பு மருந்துகளை வினியோகம் செய்யக்கூடிய இடங்களில் 2 ஆயிரத்து 800 சேமிப்பு கிடங்குகள் நிறுவப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து வந்தாலும், பொது மக்கள் முககவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story