நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடுக்கு வாய்ப்புள்ளதா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் கடந்த அக்டோபர் 16ந்தேதி வெளியிடப்பட்டது. அந்த தேர்ச்சி பட்டியலில் மாநில வாரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் குறிப்பாக திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால், வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 37,301 பேர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குளறுபடி காரணமாக, தேர்வு முடிவுகள் பட்டியல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தவறுகளை திருத்தம் செய்து புதிய முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதனை தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய புள்ளிவிவர பட்டியல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் கடந்த அக்டோபர் 17ந்தேதி வெளியானது.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் தேர்வில், 594 மதிப்பெண்கள் பெற்றதை, 12 நாட்களில் மதிப்பெண்களை குறைத்து, புது விடைத்தாள் வெளியிட்டுள்ளனர் என புகாராக தெரிவித்து உள்ளார். இதனால் விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
இதுபற்றி தீர விசாரித்து அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய வேண்டுமென்று தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தொடர்ந்து, 594 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க மாணவருக்கு அனுமதி வழங்கவும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story