ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பிறகு அவரை பற்றி கருத்து கூறுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த்


ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பிறகு அவரை பற்றி கருத்து கூறுகிறேன் -  பிரேமலதா விஜயகாந்த்
x

ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பிறகு அவரை பற்றி கருத்து கூறுகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஆண்டிப்பட்டி,

வருகிற சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த மாதம் (ஜனவரி) முடிவு செய்ய இருப்பதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க. தயார் நிலையில் உள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தே.மு.தி.க. ஒன்றிய கவுன்சிலர் திருமண விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தே.மு. தி.க. தயார் நிலையில் உள்ளது. இந்த நிமிடம் வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்கிறோம். அடுத்த மாதம் (ஜனவரி) தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார். பிரசாரத்திலும் அவர் ஈடுபடுவார்.

ரஜினிகாந்த்கட்சியை ஆரம்பித்து, பெயர், சின்னத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும். அதன்பிறகு அவரை பற்றி கருத்து கூறுகிறேன்.

தே.மு.தி.க. எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே செயல்படும். டெல்லியில் போராடுகிற பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் நடக்கிற விவசாயிகளின் போராட்டத்தை வைத்து அரசியல் செய்யப்படுகிறது.

நிவர், புரெவி புயல் தாக்கத்தின் போது தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும், குறையும் உள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் உயிர்பலி ஏற்படவில்லை.

 மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது என்பது ஆறுதலான விஷயம். அதே நேரத்தில் குறை என்று சொன்னால் போதுமான வடிகால் வசதி இல்லை. நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் மழைநீர் வீணாக கடலில் கலந்தது. இதனை சரிசெய்யும் கடமை அரசுக்கு தான் உள்ளது.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Next Story