பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தை ஏற்கும் தமிழக அரசின் நடைமுறைக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தை ஏற்கும் தமிழக அரசின் நடைமுறைக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 11 Dec 2020 4:41 AM IST (Updated: 11 Dec 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தை ஏற்கும் தமிழக அரசின் நடைமுறைக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


சென்னை, 

பச்சையப்பா அறக்கட்டளையை தமிழக அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கந்தசாமி கல்லூரி உதவி பேராசிரியர் முருகன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் 234 உதவி பேராசிரியர்கள் முந்தைய நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அறக்கட்டளை மீது புகார்கள் வந்ததை தொடர்ந்து, அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர், இந்த நியமனங்கள் தொடர்பாக ஆய்வு செய்தபோது, 105 உதவி பேராசிரியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து 105 உதவி பேராசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தை அரசே ஏற்று ஏன் நடத்தக்கூடாது? என்று தமிழக அரசு, அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவறானது. எனவே, பச்சையப்பன் அறக்கட்டளையை தமிழக அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட 105 உதவி பேராசிரியர்களை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்குவந்தது.

அப்போது நீதிபதிகள், “பச்சையப்பா அறக்கட்டளை தொடர்பாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.,

விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Next Story