இன்று தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது வானவில் பண்பாட்டு மையத்தின் ‘பன்னாட்டு பாரதி திருவிழா’ காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு


இன்று தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது வானவில் பண்பாட்டு மையத்தின் ‘பன்னாட்டு பாரதி திருவிழா’ காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Dec 2020 5:56 AM IST (Updated: 11 Dec 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா’ இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

சென்னை, 

வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, சென்னையில் நேற்று காணொலிக்காட்சி வழியாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாகவி பாரதியின் தேசிய உணர்வுகளை முன்னிறுத்தும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதியார் புகழை உலகம் போற்றும் வகையில் பன்னாட்டு பாரதி திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்.

அதன்படி, பாரதியாரின் பிறந்தநாளான 11-ந்தேதி (இன்று) காலை 9 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முகப்பு வாயிலில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மூத்த தமிழ் கவிஞரான சியாமளா ராஜசேகருக்கு சால்வை, பொற்கிழி வழங்கப்படுகிறது. சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து 20-ந்தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலி காட்சி வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சிகள் ஆன்லைன் வழியாகவே இந்த ஆண்டு முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி 11-ந்தேதி (இன்று) கவிப்பொழிவும், கவிதை போட்டி இறுதி சுற்றும் எனும் கவிதை நிகழ்ச்சி, பாரதி யார்? நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் விழாவில் கலந்து கொண்டு பாரதி அறிஞர் சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

12-ந்தேதி (நாளை) தமிழ் - பாரதிக்கு பிறகு வினாடி வினா போட்டி, பாரதி பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந்தேதி பல்சுவை தொகுப்பு நிகழ்ச்சி, பன்முக பாரதி, என்றென்றும் பாரதி, கண்ணன் என்னும் மன்னன் எனும் தலைப்புகளில் சிறப்புரைகள், யோகாவில் பாரதி, நடன நிகழ்ச்சி, குயில் பாட்டு நிகழ்ச்சி, ‘தாள ஸ்ருதி’ பல்சுவை தொகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

14-ந்தேதி ‘நமது பாட்டு மின்னலுடைத்தாகுக’ சிறப்புரை, ‘பாஞ்சாலி சபதம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15-ந்தேதி புதுவையில் பாரதி பாடல்-நடன நிகழ்ச்சி, ‘யாதுமாகி நின்றாய் பாரதி’ சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது.

16-ந்தேதி பல்சுவை நிகழ்ச்சியும், ‘எரிமலையில் குளிர்பனி’ சிறப்புரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

17-ந்தேதி ‘பத்திரிகையாளர் பாரதி’ சிறப்புரை, பல்சுவை தொகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ந்தேதி பாரதியின் ஆன்மிக சுடர் சிறப்புரை, பாரதியின் சிவாஜி எனும் சமஸ்கிருத நாடகம் நடக்கிறது. 19-ந்தேதி பாரதியின் புதுமைப்பெண் - மரபும், புரட்சியும் கலந்துரையாடல், பாரதி சக்தி நடன நிகழ்ச்சி நடக்கிறது.

20-ந்தேதி ஆடல்- இசை- கலை நிகழ்ச்சி, சிந்தனை ஒன்றுடையாள் கவிதாஞ்சலி நிகழ்ச்சி, இளைய பாரதத்தினாய் வா வா வா எனும் நிகழ்ச்சி, ஆங்கில நாட்டில் அமரகவி நிகழ்ச்சி, பல்சுவை தொகுப்பு நிகழ்ச்சி, பாரதி பெட்டகம் மற்றும் வானவில் கதைகள் நூல்கள் வெளியீட்டு விழா, பரிசு வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சியுடன் நிறைவு விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் லண்டன், பாரிஸ், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, கலிபோர்னியா, சிகாகோ போன்ற வெளிநாடு வாழ் பாரதியார் பக்தர்களாலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் பாரதியார் பக்தர்களாலும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வானவில் பண்பாட்டு மையத்தின் அமைப்பாளர் ஷோபனா ரமேஷ் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story