டிசம்பர் இறுதியில் பா.ஜ.க. தேசிய தலைவர் தமிழகம் வர வாய்ப்பு: எல். முருகன் பேட்டி


டிசம்பர் இறுதியில் பா.ஜ.க. தேசிய தலைவர் தமிழகம் வர வாய்ப்பு:  எல். முருகன் பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2020 2:35 PM IST (Updated: 11 Dec 2020 2:35 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் மாத இறுதியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றியும், பிரசார பணிகளுக்கு தயாராவது, நட்சத்திர பேச்சாளர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வியூகங்களை கட்சிகள் வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் இன்று அளித்துள்ள பேட்டியில், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலை சுட்டி காட்டி பேசினார்.

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் பகுதிக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் தனது காரில் சென்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்க்கியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர்.  டையமண்ட் ஹார்பர் பகுதிக்கு வந்தபொழுது, அவரது வாகனத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், அவரது காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.  இதேபோன்று அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடியும் கல்வீச்சில் சேதமடைந்தது.  அக்கட்சியின் மற்றொரு தலைவரான தீபஞ்சன் குஹா சென்ற வாகனத்தின் மீதும் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதேபோன்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் சென்ற பகுதியையும் தடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதனை சுட்டி காட்டி எல். முருகன் கூறும்பொழுது, மேற்கு வங்காளம், கேரளாவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  அடுத்து வரும் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறினார்.  இதேபோன்று, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story