பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக கீழ்ராவந்தவாடி சிற்பக்குளம், அழகர்மலை யானை சிற்பம் தேர்வு தமிழக அரசு அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம், அரியலூர் மாவட்டம் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பம் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் புராதன நினைவுச் சின்னங்கள் கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளாக திகழ்கின்றன. அரசியல், வரலாற்று தகவல்களை உணர்த்துவனவாக நினைவுச் சின்னங்கள் விளங்குகின்றன. தமிழகத்தில் 92 பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம் (அம்மாகுளம்), அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பம் ஆகிய 2 புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம் (அம்மாகுளம்) 16-ம் நூற்றாண்டின் நாயக்கர் மன்னர்கள் காலத்தை சார்ந்ததாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில், ஜெயங்கொண்டத்திலிருந்து, கங்கைகொண்ட சோழபுரம் பகுதியிலிருந்து வடக்கே சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அழகர்மலை கிராமம். முதலாம் ராசேந்திரசோழன் கங்கைகொண்டசோழபுரத்தை தலைநகராக கொண்டு, ஆட்சி புரிந்தபோது இந்த அழகர்மலையும் அதில் உள்ளடங்கியதாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு பின்னர் வந்த விஜய நகர மற்றும் நாயக்கர் காலஅரசர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்டதாக இப்பகுதி இருந்துள்ளது.
இந்த அழகர்மலை கிராமத்தில் அமைந்துள்ள சுதையாலான யானைச் சிற்பமானது 80 அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளது. யானைச் சிற்பம் சுமார் 41 அடிநீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இச்சிற்பம் 1617-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது.
இந்த 2 புராதனச் சின்னங்கள் தமிழக தொல்லியல்துறையால் தேர்வு செய்யப்பட்டு, உரிய முன்னிலை அறிவிக்கைகள் விடுக்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எந்த வித ஆட்சேபனையும் பெறப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு, இவ்விரு இடங்களும் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story