பீட்டர் பால் மற்றும் நடிகை வனிதாவுக்கு குற்றவியல் நீதிமன்றம் சம்மன்
பீட்டர் பால் மற்றும் நடிகை வனிதாவுக்கு குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை,
கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை மணமுடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த முதல்நாளன்றே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தன் கணவர் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹெலன் வழக்குத் தொடர்ந்தார். அதில், கணவர் பீட்டர் பால் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்களும், முகாந்திரமும் இருப்பதாகக் கூறி, வழக்குத் தொடர்பாக டிசம்பர் 23-ம் தேதி ஆஜராகும்படி, வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story