27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் உயர் கல்வித்துறை உத்தரவு
27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் உயர் கல்வித்துறை உத்தரவு
சென்னை,
தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1.6.2018 அன்று 2018-19-ம் ஆண்டுக்கான சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும். இதற்கு ஆண்டுக்கு ரூ.152 கோடியே 20 லட்சம் தொடரும் செலவினம் ஆகும்’ என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக 1995-96-ம் ஆண்டு முதல் 2010-11-ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கல்லூரிக்கல்வி இயக்குனர், மீதம் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கு நிர்வாக அனுமதியும், அக்கல்லூரிகளுக்கு தேவைப்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான ஓராண்டு செலவினமாக ரூ.143 கோடியே 74 லட்சத்து 53 ஆயிரத்து 540 நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவருடைய கருத்துருவை அரசு நன்கு பரிசீலித்து, 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம், மதிப்பூதியத்துக்கான செலவினத்தொகையை சார்ந்த பல்கலைக்கழகங்களே இக்கல்வியாண்டு வழங்கவேண்டும். மேலும், காஞ்சீபுரம் மாவட்டம் நெம்மேலியில் உள்ள சென்னை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்பட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக 2020-21-ம் கல்வியாண்டு முதல் மாற்றம் செய்தும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story