மனைப்பிரிவுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தும் வழிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டது


மனைப்பிரிவுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தும் வழிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டது
x
தினத்தந்தி 13 Dec 2020 2:27 AM IST (Updated: 13 Dec 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

மனைப்பிரிவுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தும் வழிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டது

சென்னை,

தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டு வசதித்துறை செயலாளர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை அரசு வெளியிட்டது. அதன்படி மனைப்பிரிவுகள், உட்பிரிவுகள் ஆகியவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

மனைப்பிரிவுகளில் சாலைக் காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடத்தை பொழுதுபோக்கு பகுதிக்காக ஒதுக்கி அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும். அதோடு, மொத்த பரப்பில் ஒரு சதவீத பகுதியை பொது பயன்பாட்டிற்காகவும், 0.5 சதவீதம் பகுதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் வழங்க வேண்டும்.

இந்த நிலையில், மனைப் பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசுக்கு கிரெடய் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலாளரும், இதுதொடர்பான உரிய அறிவுறுத்தல்களை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். நகர ஊரமைப்புத்துறை (டி.டி.சி.பி.) இயக்குனரும் அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்திருந்தார்.

அவற்றை பரிசீலித்த தமிழக அரசு, மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதை எளிமைப்படுத்த சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி அனுமதி கோரும் மனைப் பிரிவை, சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. அதிகாரிகள் பார்வையிட்டு, சாலை, திறந்த வெளிப்பகுதி, பொதுமக்கள் உபயோகத்துக் கான பகுதிகளை உள்ளாட்சிக்கு தானமாக வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திட்ட அனுமதி, மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம் வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சி பகுதியாக இருந்தால், திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றுக்கு மாநகராட்சி கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்பின் தானமாக வழங்கப்பட்ட இடங்களை கையகப்படுத்த வேண்டும்.

மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் கவுன்சிலின் ஒப்புதலை பெறப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சியில், சாலைகள், மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகளுக்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

கட்டணத்தை பெற்ற பின்பு, இறுதியான மனைப்பிரிவு வரைபடம், திட்ட குழுமத்தின் அனுமதி, உள்ளாட்சியின் அனுமதி ஆகியவற்றை விண்ணப்பதாரருக்கு நேரடியாக அளிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் தவிர மற்ற பகுதிகளில் உரிய கட்டணங்களை பெற்ற பின்பு, தார்சாலைகள் அமைப்பு, மழைநீர் கால்வாய், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலை விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story