100 கிலோ தங்கம் மாயமான வழக்கு: உள்மட்ட விசாரணை நடந்து வருவதாக சி.பி.ஐ. விளக்கம்


100 கிலோ தங்கம் மாயமான வழக்கு: உள்மட்ட விசாரணை நடந்து வருவதாக சி.பி.ஐ. விளக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2020 3:52 AM IST (Updated: 13 Dec 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

‘100 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீது தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கம் அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. அதற்கான சாவிகளும் ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கர் திறக்கப்பட்டது. ஆனால் அதில் 296.66 கிலோ தங்கமே இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கமானது சி.பி.ஐ.க்கு சொந்தமான பண்டக சாலையில் வைக்கப்படவே இல்லை. அந்த தங்கம் முழுமையாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள லாக்கரில் தான் வைக்கப்பட்டிருந்தது. 

லாக்கரில் உள்ள தங்கம் குறைந்தது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உயர் அதிகாரி தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ. சார்பில் இந்த உள்மட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கடந்த 11-ந்தேதி (நேற்று முன்தினம்) தீர்ப்பு அளித்திருக்கிறது. சி.பி.ஐ. சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்மட்ட விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த விசாரணையில் அதிகாரிகள் மீது தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

அதேவேளை டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின்கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்குப்பதிவு செய்ய முடியாது. உள்ளூர் போலீசால் மட்டுமே திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும். எனவே மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள். சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு பதவியை கொண்ட அதிகாரி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story