தமிழகம் தவிர்த்து 27 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கான சிறப்பு நிதி விடுவிப்பு


தமிழகம் தவிர்த்து 27 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கான சிறப்பு நிதி விடுவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2020 4:35 AM IST (Updated: 13 Dec 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய்த்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை கருத்தில்கொண்டு, மாநிலங்களின் மூலதன செலவை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு நிதிஉதவி திட்டம் தயாரிக்கப்பட்டது.

புதுடெல்லி, 

கொரோனா நோய்த்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை கருத்தில்கொண்டு, மாநிலங்களின் மூலதன செலவை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு நிதிஉதவி திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்சார்பு இந்தியா நலத்தொகுப்பின் ஒரு பகுதியான மூலதன செலவினங்களுக்கான அந்த சிறப்பு திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு மாநிலங்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த திட்டத்துக்காக தமிழகம் உள்பட 28 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்து 250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தமிழகம் தவிர்த்து மற்ற 27 மாநிலங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 879 கோடியே 61 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.4 ஆயிரத்து 939 கோடியே 81 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம் ரூ.750 கோடியே 50 லட்சம் பெறுகிறது.

இந்த நிதியில் இருந்து கல்வி, சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் வினியோகம், எரிசக்தி, போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளின் மூலதனச் செலவினங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. சிறப்பு நிதி உதவி திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.351 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

Next Story