3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு: விவசாயிகள் கொடுக்கும் தண்டனையில் இருந்து அ.தி.மு.க. தப்ப முடியாது டி.ஆர்.பாலு அறிக்கை
3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்ததால், விவசாயிகள் கொடுக்கும் தண்டனையில் இருந்து அ.தி.மு.க. தப்ப முடியாது என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள் தி.மு.க.வின் 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவைதான்” என்று, தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதையே படித்துப் பார்க்காமலும், படித்தாலும் புரிந்துகொள்ளாமலும், பகிரங்கமாகவே அபாண்டமாகப் பொய் பேசியிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைத் தேடிப்பிடித்து ஒரு பேட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார். குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுக்கப்படும், இலவச மின்சாரம் தொடரும், உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும், நடமாடும் சந்தைகள் அமைக்கப்படும் என்ற 2016-ல் அளித்த தி.மு.க.வின் அந்த வாக்குறுதிகள் இன்று கூட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பயமுறுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தனது ஊழல் முறைகேடுகள் குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவற்றின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்து, இன்றைக்குத் தமிழகம் மட்டுமின்றி நாடே கொந்தளித்துப் போராட அடிப்படைக் காரணமாக இருந்துவிட்டு இப்போதும் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நீட்டி முழக்கிப் பேசிவரும் ஒரே முதல்-அமைச்சர் இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான்.
அதற்குத் தக்க தண்டனையை, தேர்தல் நேரத்தில் தங்களின் வாக்குரிமையின் மூலம் தமிழக விவசாயிகள் நிச்சயம் கொடுப்பார்கள்; அதில் இருந்து அ.தி.மு.க. தப்ப முடியாது. இச்சட்டங்களைக் கொண்டுவந்த பா.ஜ.க.வையும் விவசாயப் பெருமக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story