வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் 18-ந் தேதி நடக்கிறது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை பல கோடி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். மத்திய மந்திரி பியூஷ் கோயல் விவசாயிகள் போராட்டக்களத்தில் நக்சலைட்டுகளும், தீவிரவாதிகளும் நுழைந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுடன் பிரதமர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கிறது. போராட்டக்குழு அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச்சாவடிகளை தடுத்து நிறுத்தி ரெயில் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story