ஒரு பூத்துக்கு 75 பேர் கொண்ட கமிட்டியை இந்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் அமைக்க வேண்டும் அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
ஒரு பூத்துக்கு 75 பேர் கொண்ட கமிட்டி எனும் வீதத்தில் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. மண்டல உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின்போது, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ஒரு அறையில் அமர்ந்து மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை வரவழைத்து, ‘உங்கள் மண்டலத்தில் எத்தனை பூத்கள் உள்ளன? எத்தனை பேரை உறுப்பினர்களாக பூத்களில் நியமித்திருக்கிறீர்கள்? என்ற விவரங்களை கேட்டறிந்தனர்.
மேலும், இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் இருந்து 25 பேர், பெண்கள் 25 பேர் மற்றும் ஏற்கனவே நியமிக்கப்பட இருந்த கட்சிக்காரர்கள் 25 பேர் என மொத்தம் 75 பேர் கொண்ட பூத் கமிட்டியை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி ஒரு பூத்துக்கு 75 பேரை உறுப்பினர்களாக நியமித்தால் நமக்கு வெற்றி நிச்சயம். இந்த 75 பேரின் படங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய பட்டியலை உடனடியாக தயாரிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பூத்களிலும் 75 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிட்டார்.
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம், கடையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி செல்வின் என்பவர், ‘பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்த தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., அந்த கோபுரத்தைக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்திய தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோருக்கு தென்காசி காந்தி சிலை அருகே முழு உருவ வெண்கல சிலை நிறுவவேண்டும்’, என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார்.
Related Tags :
Next Story