தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2020 4:47 AM IST (Updated: 15 Dec 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. புயலுக்கு பிந்தைய சில நாட்களில் மட்டும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

அதே சமயத்தில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. மாலை 6 மணிக்கு பின்னரே பனிப்பொழிவின் தாக்கத்தை உணரமுடிகிறது. சென்னையை பொறுத்தமட்டில் பகல் நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் பனிப்பொழிவு என வித்தியாசமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்தநிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15-ந்தேதி (இன்று) தமிழகம் கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரை கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறையில் 1 செ.மீ. மழை பதிவு

நேற்று பிற்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story