சென்னை மெரினா கடற்கரை 9 மாதங்களுக்கு பிறகு திறப்பு அதிகாலை முதலே ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா கடற்கரை 9 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே கடற்கரைக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வர தொடங்கினர்.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் சென்னை கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை பகுதி மக்கள் நுழையாத வகையில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மெயின் ரோட்டில் இருந்து கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.
இதனால் கடற்கரை பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். குறிப்பாக சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் அனுமதி இல்லை என்பதால், காமராஜர் சாலை நடைபாதையிலேயே நடைபயிற்சி மேற்கொண்டனர். விளையாட்டு பயிற்சி பெறுவோரும் உரிய பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்து வந்தனர். கடற்கரையில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கடல் காற்றை அனுபவிக்க முடியாமல் சென்னை மக்கள் தவித்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் ஊரடங்கில் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் 14-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
இதையொட்டி, கடந்த சில நாட்களாக கடற்கரை வளாகத்தில் தூய்மை பணிகள் வேகவேகமாக நடந்து வந்தன. கடற்கரை மணற்பரப்பில் கடை விரித்திருந்தவர்களும் தங்கள் கடைகளில் புணரமைப்பு பணியை கையாண்டனர்.
அரசு அறிவித்தபடி, 9 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக் காக மீண்டும் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் கடற்கரைக்கு படையெடுத்தனர். குறிப்பாக நடைபயிற்சி மேற்கொள்வோர் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். பல மாதங்களுக்கு பிறகு கடற்கரை திறக்கப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் நடைபோட்டனர்.
கடற்கரை மணற்பரப்பில் கபடி, சிலம்பம் என பல்வேறு விளையாட்டு பயிற்சிகளிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இதுதவிர சர்வீஸ் சாலையில் கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளிலும் மாணவ-மாணவிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். மேலும் கடற்கரை மணற்பரப்பில் கைப்பந்து விளையாடியும், இறகுப்பந்து விளையாடியும் இளைஞர்கள் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். அந்த வகையில் 9 மாதங்களுக்கு மீண்டும் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் இடமாக மெரினா கடற்கரை மாறியது.
அதேவேளை அதிகாலை முதல் காலை 8 மணி வரை சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோர் எந்த வித சிக்கலின்றி தங்களது பயிற்சியை தொடர்ந்தனர். அதேவேளை பொதுமக்கள் சமூக இடைவெளி கண்காணிக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்கொத்தி பாம்பாக கண்காணித்தனர்.
ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டாக செல்லும் பொதுமக்களை சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு எச்சரித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த சிலரையும், ஒழுங்காக முக கவசம் அணியாமல் சென்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கினார். குதிரைப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
பல மாதங்களுக்கு பிறகு கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். காலையில் இருந்தே குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்கு வந்தனர். கடற்கரை காற்று வாங்க இனி கட்டுப்பாடு இல்லை என்பதால் கடற்கரை மணற்பரப்பில் உற்சாகமாக ஓடி விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்-சிறுமிகள் மணலில் வீடு கட்டி மகிழ்ந்தனர்.
நேற்று மெரினா கடற்கரை உற்சாக வெள்ளத்தில் மிதந்தது என்றே சொல்லலாம். மேலும் கடற்கரையில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பூங்காக்களிலும் அமர்ந்து மக்கள் இளைப்பாறினர். மேலும் யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளிலும் ஈடுபட்டனர்.
இதேபோல பெசன்ட்நகர், நீலாங்கரை, திருவான்மியூர் கடற்கரைகளும் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன. சென்னை கடற்கரைகள் திறக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காதலர்கள் உற்சாக உலா
எப்போது மெரினா கடற்கரை திறக்கப்படுமோ... எனும் எதிர்பார்ப்பில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் காதலர்கள். அந்தவளவு மெரினா கடற்கரையில் கடல் அலை சத்தத்துக்கு ஈடாக காதலர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். மெரினா கடற்கரை மூடப்பட்டிருந்ததால் காதலர்கள் மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் அவ்வப்போது போலீசார் கண்ணில் மண்ணை தூவி கடற்கரையில் உற்சாகமாக சுற்றி திரிந்து வந்தனர்.
இந்தநிலையில் மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டதால் காதலர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நேற்று அதிகாலை முதலே காதலர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். கடற்கரை மணற்பரப்பில் நேற்று உற்சாகமாக உலா வந்தனர்.
கடற்கரை மீண்டும் திறப்பு: மொட்டை மாடி நடைபயிற்சிக்கு விடை கிடைத்தது முதியோர் உற்சாகம்
சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டதால் நடைபயிற்சி செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முதியோர் மீண்டும் குதூகலம் அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். இதுகுறித்து மெரினாவுக்கு நடைபயிற்சி மேற்கொண்ட முதியோர் கூறியதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா கடற்கரை மூடப்பட்டதால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தோம். இதனால் வீட்டு மொட்டை மாடிகளிலேயே நடைபயிற்சி செய்து வந்தோம். என்னதான் வீடுகளிலேயே பயிற்சி மேற்கொண்டாலும், கடற்கரையில் காற்று வாங்க நடைபயிற்சி செய்வதே தனி சுகம் தான். தற்போது கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொட்டை மாடி நடைபயிற்சிக்கும் விடை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story