உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி


உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 15 Dec 2020 12:07 PM IST (Updated: 15 Dec 2020 12:07 PM IST)
t-max-icont-min-icon

உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை

கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 9 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று குறைந்ததும் தமிழக அரசால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், குற்றாலத்தில் மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒருபகுதியாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் குளிக்கலாம். சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறி உள்ளார்.

இன்று முதல் குற்றால அருவியில் அனைவரும் குளிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அருவிக் கரையில் உள்ள தீர்த்தவாரி விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமிநாசினியும் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து குளிக்கும் வகையில் போலீசார் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதித்தனர். இன்று குற்றால அருவி திறப்பதை அறிந்து பல மாவட்டங்களை சேர்ந்தோர் இரவோடு இரவாக கிளம்பி வந்து குற்றால அருவியில் குளித்தனர். அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story