7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு


7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
x
தினத்தந்தி 15 Dec 2020 1:22 PM IST (Updated: 15 Dec 2020 1:22 PM IST)
t-max-icont-min-icon

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தின் முலம் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஜா என்ற மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவர் அளித்துள்ள மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து 3-ஆவது முயற்சியாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தனக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட எடுக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாமற்றது. எனவே 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிந்தது.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். 

மேலும் அரசுப்பள்ளி மாணவர்களை எதிரியாக பார்க்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story