சென்னையில் அடுத்த 2 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டும் - மாநகராட்சி கமிஷனர் பேட்டி
சென்னையில் இறப்பு விகிதத்தை குறைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், அடுத்த 2 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-
சென்னையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் 100 சதவீதம் முழுமையாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை இன்னும் 2 நாட்களில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்ட போகிறது. தற்போது சென்னையில் 3-ல் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இறப்பு விகிதத்தை பொறுத்தவரை 2.4 சதவீதத்தில் இருந்து 1.76 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இறப்பு விகிதத்தை குறைக்க, மாநகராட்சி சார்பிலும், சுகாதாரத்துறை சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
கொரோனா தொற்று தடுப்பு பணிகளில், சுகாதாரத்துறையுடன் இணைந்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கணக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மருத்துவமனை தொடர்பான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 7 ஆயிரம் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் உள்ளனர். அந்த நபர்கள் தொடர்பான கணக்கீடுகளை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் முடித்து, பட்டியல் தயார்நிலையில் வைக்கப் படும். தடுப்பூசி போடுவதற் கான உத்தரவை அரசு பிறப்பித்தவுடன், குறுகிய காலத்தில் இவர்களுக்கு போடுவதற்கான ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 மாதங் கள் ஆகலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story