கரூர் மாவட்டத்தில் முதல் - அமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு


கரூர் மாவட்டத்தில் முதல் - அமைச்சர்  பழனிசாமி இன்று ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2020 8:17 AM IST (Updated: 16 Dec 2020 8:17 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்புப்பணி குறித்து முதல் - அமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

கரூரில் இன்று காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு நாமக்கல் வழியாக கரூர் வந்தடைகிறார்.

பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பாக ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, பொதுசுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில்மையம், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

பின்னர், குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதையடுத்து மேற்கண்ட நிகழ்ச்சிகளை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடித்து விட்டு மதியம் 3 மணிக்கு கரூரில் இருந்து கார் மூலமாக சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story