சென்னை ஐஐடியில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை ஐஐடியில் மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், அவர் உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை தொடங்கியது.
இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு விடுதியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனையை நேற்று காலை மேற்கொள்ள தொடங்கினர். ஒரு விடுதியில் 100 மாணவர்கள் வீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வைத்து மாணவர்களின் முகவரி உள்பட சுயவிவரங்கள் பெற்று அவர்களின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
‘சென்னை ஐஐடியில் மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணாபல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்றுவரை 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் தொற்று எண்ணிக்கை கூடியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story