மாநில மொழியில் தொழில்துறை சார்ந்த படிப்புகளை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
தொழில்துறை சார்ந்த படிப்புகளை மாநில மொழிகளில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை,
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 தேர்வில் 181 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 34 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மட்டுமே முழு நேர பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் அனைவரும் இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக தொலைதூரக்கல்வி முறையில் பயின்றவர்கள் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற்று, 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 500 நபர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தொழில்துறை சார்ந்த படிப்புகளை மாநில மொழிகளில் படிப்பதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணிபுரிய முடியும்.
ஆனால் ஆங்கில வழியில் பயில்வதன் மூலம் உலகம் உலகம் முழுவதும் சென்று பணிபுரியலாம். எனவே தொழில்துறை சார்ந்த படிப்புகளை மாநில மொழிகளில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story