தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை:ரூ.7½ கோடி பணம், 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல், 33 அதிகாரிகள் கைது


தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை:ரூ.7½ கோடி பணம், 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல், 33 அதிகாரிகள் கைது
x
தினத்தந்தி 17 Dec 2020 7:15 AM IST (Updated: 17 Dec 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ரூ.7½ கோடி பணம், 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் 33 அரசு அதிகாரிகள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

சென்னை

தமிழகம் முழுவதும் கடந்த 2½ மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச வழக்கில் 33 அரசு அதிகாரிகளை கைது செய்து சிறையில் தள்ளினார்கள். இந்த 2½ மாதங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.7½ கோடி ரொக்கப்பணமும், 7 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்கள் கொரோனா புயல் ஒரு பக்கம் தாக்கியது. மேலும் இயற்கையாக 2 புயல்கள் தமிழகத்தை தாக்கின. இந்த புயல்களோடு மக்களை அரசு அதிகாரிகளின் லஞ்ச புயலும் விட்டு வைக்கவில்லை. அரசு அலுவலகங்கள் முடங்கி கிடந்த நேரத்தில் கூட அதிகாரிகளின் லஞ்ச வேட்டை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

கொரோனா புயலையும், இயற்கை புயலையும் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்து தாங்கிக்கொண்டனர். ஆனால் லஞ்ச புயலை மட்டும் மக்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் மக்களை லஞ்ச புயலில் இருந்து ஓரளவு காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் களத்தில் இறங்கினர். கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தமிழகம் முழுவதும் லஞ்ச புயலை ஒழிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டார்கள். எங்கெல்லாம் அதிக அளவில் லஞ்ச புயல் தாக்கியதோ, அங்கெல்லாம் பறந்து சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள்.

ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், பத்திரபதிவு அலுவலகங்கள், வருவாய் துறை அலுவலகங்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் இதுபோன்ற மக்கள் நேரடியாக பாதிக்கும் அலுவலகங்களில் குறிவைத்து போலீசார் தாக்குதல் வேட்டையை தொடுத்தனர். லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக 33 அரசு அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மின்சார வாரிய, பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள், பி.டி.ஓ., வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் போன்றோர் அதிக அளவில் அடங்குவார்கள்.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், தீயணைக்கும் துறை அதிகாரி ஒருவரும் கூட கைதானார்கள். நாகப்பட்டினத்தில் தனராஜ் என்ற சுற்றுச்சூழல் துறை என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.62 லட்சம் கைப்பற்றப்பட்டது. சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூட இதுபோல் லஞ்ச முதலைகளாக இருப்பார்களா? என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளையே ஆச்சரியப்பட வைத்தது.

அதன்பிறகுதான் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்ட சுற்றுச்சூழல் துறை சூப்பிரண்டு பாண்டியனின் அலுவலகம் மற்றும் வீட்டில் நடந்த சோதனையில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு லஞ்சப்பணம் சிக்கியது. ரொக்கப்பணம் மட்டும் ரூ.1.37 கோடி ஆகும். 3 கிலோ அளவுக்கு தங்க-வைர நகைகள் கைப்பற்றப்பட்டது. அவரது வங்கி கணக்கில் ரூ.37 லட்சம் இருந்தது.

கடந்த இரண்டரை மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.7½ கோடி அளவுக்கு ரொக்கப்பணமும், 7 கிலோ அளவுக்கு தங்க-வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

நேரடியாக லஞ்சம் வாங்கி கைதானவர்கள் தப்பமுடியாது. அவர்கள் மீது வழக்கு போட்டு, எளிதில் குற்றத்தை நிரூபித்து விடலாம். இலாகா பூர்வ நடவடிக்கை கூட உடனே பாய்ந்து விடும். ஆனால் திடீர் சோதனையில் சிக்கியவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை போன்ற பொருட்கள் லஞ்சத்தில் தொடர்புடையதுதான் என்பதை நாங்கள் உரிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு மட்டுமே போட முடியும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற அதிகாரிகள் மீது பணி இடை நீக்கம் என்ற இலாகா பூர்வ நடவடிக்கை கூட உடனடியாக எடுக்க சிபாரிசு செய்ய முடியாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறினார்கள். லஞ்சம் கடலைப்போல பெரிய அளவில் தமிழகத்தில் விரிந்து, பரந்து கிடக்கிறது. இதில் நாங்கள் எடுத்த நடவடிக்கை சிறிய அளவில்தான் அடங்கும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குறிப்பிட்டனர்.

Next Story