திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி முதல் 48 நாட்களுக்கு தரிசனம் செய்யலாம்
சனிப்பெயர்ச்சி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட கலெக்டரும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2½ வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5.22 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை அமல்படுத்தும்போது சில பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
எனவே பக்தர்களின் சிரமங்களை தவிர்க்க, சனிப்பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியில் இருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனிப்பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும்.
சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. கோவிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் கோவில் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கோவிலில் தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் (ஆன்லைன் முகவரி- www.thirunallarutemple.org) முன்பதிவு செய்வது மிக அவசியம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story