‘எம்.ஜி.ஆர். பெயரை கமல் பயன்படுத்துவது சுயநலம்’ - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சுயநலத்துக்காக எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதே கமல்ஹாசனின் ஒரே நோக்கமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.
அப்போது நடிகர் கமல்ஹாசனின் ‘டுவிட்டர்’ பதிவுகள் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
கமல்ஹாசன் போட்ட ‘டுவிட்டர்’ பதிவுகள் அவருக்குதான் பொருந்தும். அவர்தான் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் காலையும், அ.தி.மு.க.வினர் காலையும் பிடித்து வருகிறார். அ.தி.மு.க.வினர் வாக்கை வாங்கவே கமல் எங்கள் காலை பிடித்து வருகிறார். போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே என்றுதான் கமலுக்கு கூற விரும்புகிறேன்.
எம்.ஜி.ஆரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாடக்கூடாது. எம்.ஜி.ஆர். பெயரை சொல்ல கமலுக்கு தகுதி இல்லை. சுயநலத்துக்காக எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதே கமல்ஹாசனின் ஒரே நோக்கமாக உள்ளது.
லஞ்சம், ஊழலை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கடமையை பாராட்டுவதை விட்டு ‘டுவிட்டர்’ போடுகிறார் என்றால் கமல் என்ன கூற வருகிறார்?.
டி.வி.நிகழ்ச்சி மூலம் சமூக கலாசாரத்தை ஒழிக்கும் கமல், மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்?. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. கமலாகத்தான் திருந்த வேண்டும்.
நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் மக்கள் அங்கீகாரம் அ.தி.மு.க.வுக்குதான். தமிழ்நாட்டுக்கு தி.மு.க.செய்த துரோகத்துக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story