வேளாண் சட்டங்களால் என்னென்ன பலன்? விவசாயிகளை நேரில் சந்தித்து பா.ஜ.க. தலைவர்கள் விளக்குகிறார்கள்


வேளாண் சட்டங்களால் என்னென்ன பலன்? விவசாயிகளை நேரில் சந்தித்து பா.ஜ.க. தலைவர்கள் விளக்குகிறார்கள்
x
தினத்தந்தி 19 Dec 2020 2:57 AM IST (Updated: 19 Dec 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்னென்ன பலன் என்பது குறித்து இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் டெல்டா மாவட்டங்களில் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகளை சந்தித்து விளக்குகிறார்.

சென்னை, 

மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதை, பா.ஜ.க. தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று(சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் டெல்டா மாவட்டங்களில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்துகிறார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திலும், பகல் 12 மணிக்கு அரியலூர் மாவட்டம் டி.பலூர், 3 மணிக்கு தஞ்சாவூர் வடக்கு திப்பிராஜபுரம், 5 மணிக்கு தஞ்சாவூர் வடக்கு அம்மாபேட்டை இரும்புதலை, இரவு 7 மணிக்கு தஞ்சாவூர் தெற்கு கள்ள பெரம்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சாவூர் தெற்கு பகுதியில் விவசாயிகளுடனான சந்திப்பு நடக்கிறது. இதில் மாநில தலைவர் எல்.முருகனுடன், மத்திய மந்திரி வீ.கே.சிங்கும் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து 12 மணிக்கு தஞ்சாவூர் தெற்கு ஒரத்தநாடு, 3 மணிக்கு தலையாமங்கலம், 5 மணிக்கு திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை, 7 மணிக்கு விக்கிரபாண்டியம் பகுதிகளில் விவசாயிகளை சந்திக்கிறார்.

நாளைமறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம், 12 மணிக்கு நாகை தெற்கு மருதூர், 3 மணிக்கு நாகை தெற்கு கீழையூர், 6 மணிக்கு நாகை வடக்கு கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்? என்பது போன்ற விளக்கங்களை அளிக்க இருக்கிறார்கள்.

Next Story