தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரிக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 2 நாட்களுக்கு (நாளையும், நாளை மறுதினமும்) தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘புவனகிரி 11 செ.மீ., பரமக்குடி, பரங்கிப் பேட்டை தலா 7 செ.மீ., இளையாங்குடி, குடவாசல் தலா 6 செ.மீ., அய்யம்பேட்டை, காட்டுமன்னார்கோவில், கமுதி, மயிலாடுதுறை, ஆர்.எஸ்.மங்களம், ராமநாதபுரம், வட்டானம், தொண்டி தலா 5 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story