முதல் நாள் தேர்தல் பிரசாரம்: முதலமைச்சர் என்ற பதவி கடவுள் அருளால் எனக்கு கிடைத்தது - முதல்வர் பழனிசாமி- வீடியோ
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4-வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என முதல் நாள் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை
2021 சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல் எனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்குகிறேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கினார். பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பிரசாரத்தை தொடங்கினார்.
இதற்காக அவருக்கு பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் தோரணம் கட்டி அதிமுக கொடிகளையும் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களையும் அமைத்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் அவரை வரவேற்றனர். அதிமுக சார்பில் முதன் முதலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை அதிகமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் 4 முறை முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 2016 பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் எடப்பாடி தொகு அதிமுகவின் கோட்டையாக பேசப்படுகிறது.
ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் தோல்வியை சந்தித்தார். முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பிரச்சார திட்டத்தை வெளியிடாத நிலையில், முன்கூட்டியே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
பல்வேறு தடைகளை தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர்மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது.
உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் . தமிழகத்தில் உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம் 49 விழுக்காடு சாலை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றிபெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது.
தான் ஒரு அரசுப் பள்ளி மாணவன் என்ற முறையில் அவர்களது நிலையை உணர்ந்தவன் . அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என கூறினார்.
Related Tags :
Next Story