திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை? - புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை? - புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Dec 2020 11:57 PM IST (Updated: 19 Dec 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின்சாரத்துறை ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள், கடந்த 4-ந் தேதி முதல் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரியும், போராட்டத்தைக் கைவிடாவிட்டால் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதம் அடைந்துள்ளன. மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக, இவை சரிசெய்யப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, டிசம்பர் 4-ந் தேதி முதல் திடீரென சட்டவிரோத வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி கவர்னர், தலைமைச் செயலாளர், மின்துறை செயலாளர் மற்றும் மின்துறை தனியார்மயமாக்கல் எதிர்ப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story