வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது - கட்சியினருக்கு ரஜினிகாந்த் அதிரடி உத்தரவு


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது - கட்சியினருக்கு ரஜினிகாந்த் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 20 Dec 2020 1:25 AM IST (Updated: 20 Dec 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குவதால் வாக்காளர்கள் ஓட்டு போட பணம் கொடுக்கக்கூடாது என்று கட்சியினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்க இருப்பதை கடந்த 3-ந்தேதி உறுதிப்படுத்தினார். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார். கட்சி தொடங்கப்படும் தேதியை வரும் 31-ந்தேதி அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அன்றைய தினம்தான் கட்சியின் பெயர், கொடி, கொள்கை ஆகியவையும், முக்கிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்றும், தேர்தல் ஆணையம் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். தேர்தலை சந்திக்க அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியிலும் ஈடுபட தொடங்கினர். இந்தநிலையில், கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி ஆகியோர் தினமும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதாவது, ரஜினி மக்கள் மன்றத்தை பொறுத்தவரை, 38 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நடத்தப்படும் ஆலோசனையில் வருகிற 26-ந் தேதிக்குள், தங்களது மாவட்டங்களில் ‘பூத் கமிட்டி’க்கு 15 பேர் கொண்ட நிர்வாகிகள் பட்டியலையும், அவர்களது புகைப்படம், முகவரி, கையெழுத்து ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கட்சி தலைமையில் இருந்து அதிகாரபூர்வமாக 26-ந்தேதி ஒரு இ-மெயில் முகவரி அறிவிக்கப்படும் என்றும், அந்த முகவரிக்கு ‘பூத் கமிட்டி’நிர்வாகிகள் தகவலை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் உள்ளார். அங்கிருந்தபடியே கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு கட்சிக்கு அடிப்படை ‘பூத் கமிட்டி’ என்பதால், அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதில் தவறு நடந்துவிடக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், “பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுபவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருக்க வேண்டும். உண்மை விசுவாசியாக இருக்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் யாரையும் பூத் கமிட்டி நிர்வாகியாக நியமிக்கக்கூடாது. அவர்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணையும் கட்சி தலைமைக்கு அனுப்பும் பட்டியலில் தெரிவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், எக்காரணம் கொண்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது. அதுபோன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story