சட்டமன்ற தேர்தலோடு கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ


சட்டமன்ற தேர்தலோடு கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 20 Dec 2020 8:10 AM IST (Updated: 20 Dec 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

“வருகிற சட்டமன்ற தேர்தலோடு நடிகர் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச் சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தை இருமுறை கூட்டி ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். தொடர்ந்து மண்டல பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் வருகிறார்.

தமிழகம் நல்ல நிலையில் இருப்பதால்தான் நடிகர் கமல்ஹாசன் இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளார். அவரால் கலைத்துறையில் சாதிக்க முடிந்தது. நமது நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை துறை, உள்ளாட்சி துறை போன்றவற்றில் சிறந்த மாநிலத்துக்கான விருதினை ஆண்டுதோறும் பெற்று வருகிறது. தூய்மை பாரத திட்டத்தில் நெல்லை முதலிடத்தையும், தூத்துக்குடி 2-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதெல்லாம் நடிகர் கமல்ஹாசனின் கண்களுக்கு தெரியாதா?. கேரள மாநிலத்தில் கொரோனா 2-வது அலை உருவாகி உள்ளது. ஆனால் அத்தகைய நிலை தமிழகத்தில் இ்ல்லை.

எதிர்க்கட்சியான தி.மு.க.வால் கூட அ.தி.மு.க. அரசின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. தவறு இருந்தால்தானே நிரூபிக்க முடியும். நடிகர் கமல்ஹாசனின் பேச்சு, நடவடிக்கையால், இந்த சட்டமன்ற தேர்தலோடு அவர் தடம் தெரியாமல் போய் விடுவார்.

நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள். இந்த திரைப்படத்துக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும்.

புதிய வேளாண் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே, அதில் உள்ள ஷரத்துகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த விவசாயியும் பாதிக்கப்படவில்லை. வடமாநிலங்களில் விவசாயிகளின் பெயரில் பலன்களை பெற்று வந்த இடைத்தரகர்கள்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள்தான் போராட்டத்தை தூண்டி வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபட கூறி உள்ளார். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு உண்மையான விவசாய சங்க பிரதிநிதிகள் சென்றால் பிரச்சினை தீர்ந்து விடும். தமிழகத்தில் விவசாய விளைபொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்கிறார்கள். விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும் வேளாண்மை துறையிடம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதனால் தமிழக விவசாயிகள் போராட தயாராக இல்லை. எனினும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை போராட தூண்டி வருகிறார். விவசாயிகளை பகடைக்காயாக பயன்படுத்த நினைக்கிறார். ஆனால் தமிழக விவசாயிகள் விழிப்பானவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story