இலங்கைக் கடற்படையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - ஜி.கே.வாசன்
இலங்கைக் கடற்படையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோந்த ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய 4 பேரும் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்தனர்.
இந்நிலையில் இலங்கைக் கடற்படையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த வாரம் 20க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியது. இந்த அத்துமீறல் இன்றும் தொடர்கதையாகி வருகிறது. இது மிகுந்த வருத்தத்துக்குரியது.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் மத்தியில் ஏற்பட்டு இருக்கும் அச்சத்தைப் போக்கி, வருங்காலங்களில் நம்பிக்கை ஏற்படும் வகையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித பங்கமும் ஏற்படாதாவறு காக்க வேண்டும்.
மத்திய அரசு இனிமேலும் தாமதம் இல்லாமல் இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். அதோடு, இந்த அத்துமீறல்கள் மேலும் தொடராமல் இருக்க பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story