200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 1,659 நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பொதுக்குழுவாக இருந்தாலும், செயற்குழுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர் கூட்டமாக இருந்தாலும் ஒரு கருத்தை நான் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன். நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அந்த வெற்றியை சாதாரணமாக அடைந்துவிட முடியாது என்று சொல்லி வருகிறேன். அதற்கான உழைப்பை, அதற்கான செயலை, அதற் கான பிரசாரத்தை நாம் எந்த அளவுக்கு முடுக்கிவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றியை முழுமையாக அடைவோம்.
உங்களது உழைப்பை முழுமையாக பயன்படுத்துங்கள். அப்படி கொடுத்தால் மட்டுமே முழு வெற்றியை பெற முடியும். உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு பொது நோக்கம் தான் இருக்க வேண்டும். யார் வேட்பாளர்? உதயசூரியன்தான் வேட்பாளர். யார் வேட்பாளர்? கருணாநிதிதான் வேட்பாளர் என்ற ஒற்றை எண்ணம் தான் உங்களுக்கு இருக்கவேண்டும். அர்ஜூனன் வைத்த குறி தப்பாது என்பதைப் போல, தி.மு.க. வினர் வைத்த குறி தப்பாது என்பதை நிரூபித்தாக வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி, அதன் அதிகார பலம் ஒரு பக்கம். மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி, அதன் பண பலம் மறுபக்கம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் புதிது, புதிதாக பலரை உருவாக்குகிறார்கள். சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கவைக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தி.மு.க.வை யாரும் வீழ்த்த முடியாது, தி.மு.க.வினர் தான் வீழ்த்த முடியும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதற்கு என்ன காரணம்? உட்பகை. சொந்த கட்சிக்கு துரோகம் செய்து, ஆளும் கட்சிக்கு அனுசரணையாக இருப்பவர் கள், அதைவிட மோசமானவர்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
பணமா?, மக்கள் மனமா? என்றால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனத்துக்கு உள்ளது. மக்கள் மனதை நீங்கள் வென்றாக வேண்டும். அதற்காகத்தான் இந்த பிரசார வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வால் கடந்த 10 ஆண்டு காலம் பாழாகிவிட்டது என்ற எண்ணத்தை விதைக்கவேண்டும். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக்கவேண்டும். ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பிரசார பயணத்தை தொடங்க இருக்கிறேன்.
தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்றும் சொல்கிறார்கள். அதனால் இப்போதே தயாராகிறோம். யாருடன் கூட்டணி?, யாருக்கு எத்தனை தொகுதி?, என்னென்ன தொகுதி?, யார் வேட்பாளர்? என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும். வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்கள். உங்களிடம் எதிர்பார்ப்பது, ‘வெற்றி’ என்ற ஒற்றை வார்த்தைதான். அந்த வெற்றிக்கான சூத்திரங்களை மட்டும் பயன்படுத்துங்கள். எந்த வாக்குப்பெட்டியைத் திறந்தாலும் உதயசூரியன் உதிக்கவேண்டும்.
அ.தி.மு.க.வை நிராகரிக்க வைப்போம். தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்போம். நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். ‘மிஷன்-200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும். 200-க்கு ஒரு தொகுதி அல்ல, ஒரு இஞ்ச் கூட குறையக்கூடாது. இன்று (நேற்று) முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால்தான் 200-க்கும் மேல் என்பது சாத்தியம். நம்மால் முடியும். நம்மால் மட்டும்தான் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story