கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு


கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
x
தினத்தந்தி 1 Dec 2021 2:44 AM IST (Updated: 1 Dec 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணத்தால் பல்வேறு இடங்கள் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி இருந்து வருகிறது. மேலும் பல்வேறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் பெய்த தொடர் மழையால் கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள கூவம் ஆற்றங் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரட்டூர் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 3 மணி முதல் 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூவம் ஆற்றில் நீரோட்டம் தொடர்ந்து அதிகரித்தது. குறிப்பாக, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள பாரதிபுரம், கதிரவன் காலனி, மஞ்சக்கொல்லை மற்றும் திருவீதியம்மன் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளை ஒட்டி கூவம் ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நீர் மட்டம் அதிகரித்த பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல அதிகாரி மற்றும் நீர்வள ஆதாரத்துறை என்ஜினீயர்களை உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் 500 மணல் மூட்டைகள் உடனடியாக கொண்டு வரப்பட்டு கூவம் ஆற்றங்கரைகள் பலப்படுத்தப்பட்டது. மேலும், 2 பொக்லைன் எந்திரங்கள் கொண்டும் கரைகள் உயர்த்தப்பட்டன. மாநகராட்சியின் சார்பில் மஞ்சக்கொல்லை நடுநிலைப்பள்ளி மற்றும் மு.வ.வரதராசனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியின் சார்பில் 3 ஆயிரம் நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கூவம் ஆற்றில் நீரோட்டம் குறைந்து சீராக உள்ளது. இருந்தபோதிலும் அந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story