யாருக்கு அதிக அதிகாரம்...? சர்ச்சை வெடிக்குமா...? கூடியது அ.தி.மு.க செயற்குழு
நிர்வாகிகளுக்கு இடையே நிலவிவரும் அதிருப்திக்கு மத்தியில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியுள்ளது.
சென்னை,
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று (புதன்கிழமை) கூடியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 270 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கடும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டித்ததால் பரபரப்பு நிலவியது. இதேபோல், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தையும் அவர் சாடியதாக கூறப்படுகிறது.
எனவே, நிர்வாகிகளுக்கு இடையே நிலவிவரும் அதிருப்திக்கு மத்தியில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுவதால், கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. சசிகலா விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யும், அக்கட்சி சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர் ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் அ.தி.மு.க. வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி அக்கட்சி தலைமை நேற்று நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story