திட்டம் தீட்டியாச்சு... நிதி ஒதுக்கியும் நாளாச்சு... அருவா மூக்கு திட்டம் புத்துயிர் பெறுமா?


திட்டம் தீட்டியாச்சு... நிதி ஒதுக்கியும் நாளாச்சு... அருவா மூக்கு திட்டம் புத்துயிர் பெறுமா?
x
தினத்தந்தி 2 Dec 2021 12:47 PM IST (Updated: 2 Dec 2021 12:47 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் ஆண்டு தோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணையாறு, என 4 ஆறுகள் பாய்ந்து வங்க கடலில் கலக்கிறது. மற்ற மாநிலம், மாவட்டங்களில் உற்பத்தியாகும் இந்த ஆறுகள் கடலூர் மாவட்டத்தின் வடிகாலாக இருந்து வருகிறது.

மழைக்காலங்களில் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதற்கு போதிய தடுப்பணை இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணை கட்டி பராமரித்தால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க முடியும், மழைக்காலத்தில் மட்டும் 50 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் வீணாகி வருகிறது.

36 கிலோ மீட்டர்



இது ஒரு புறம் இருக்க மாவட்டத்தில் பல்வேறு வடிகால்கள் உள்ளது. இதில் கீழ்பரவனாறும் ஒன்று. இந்த ஆறு பெருமாள் ஏரியின் தென் பகுதியில் ஆரம்பித்து கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், சாத்தப்பாடி, வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை, சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு ஆகிய கிராமங்களின் விவசாயிகள் நிலப்பரப்பு வழியாக சென்று கடலூர் முதுநகர் உப்பனாற்றில் கலக்கிறது. 36 கிலோ மீட்டர் தூரம் இந்த வாய்க்கால் உள்ளது.

கீழ்பரவனாற்றில் பெருமாள் ஏரி, கொத்தவாச்சேரி ஏரி, சொக்கன்கொல்லை ஏரி, சாத்தப்பாடி ஏரி, வயலாமூர், பழைய முரட்டு வாய்க்கால் வடிகால் ஆகியவை வடிகாலாக இணைகிறது. ஆனால் இந்த கீழ்பரவனாறு தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. மேலும் ஆற்றின் இரு கரைகளும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் ஆற்றுக்கு கரையே இல்லாத நிலை உள்ளது.

அருவா மூக்கு திட்டம்

இதனால் லேசான மழை பெய்தாலே இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிரிடும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருகிறது. கால்நடைகளும் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. அப்பகுதியில் உள்ள குடிசை பகுதிகளும் தண்ணீரில் மிதந்து வருகிறது. ஆண்டுதோறும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதும், அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையில் பரவனாற்றில் ஏற்படும் வெள்ளத்தை விரைவில் கடலில் வடிய வைக்கும் வகையில், கடலூர் துறைமுகத்திற்கு முன்பாக திருச்சோபுரம் பகுதியில் அருவா மூக்கு (அரிவாள் வடிவில் பாயும்) என்ற இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தை தவிர்த்து 1600 மீட்டர் அருகில் உள்ள கடலில் சுமார் 21 ஆயிரத்து 200 கன அடி வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் புதிய கால்வாய் அமைத்து பரவனாற்றை பெரியக்குப்பம் கிராமம் அருகே கடலோடு கலக்க வைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

அதில் கடல் நீர் வாய்க்கால் வழியாக பரவனாற்றில் உட்புகாமல் தடுக்கும் விதமாக ஷட்டருடன் கூடிய பாலமும் கட்டித்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் இந்த திட்டத்தை மாநில பேரிடர் மற்றும் மேலாண்மை துறையின் மூலம் செயல்படுத்த கடந்த 27.9.2019 அன்று ரூ.54 கோடியே 50 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையின் உயர் மட்ட தொழில்நுட்ப குழு அருவாமூக்கு திட்டம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு, அந்த திட்டத்தில் சில மாற்றங்களை முன் வைத்து, அதன்படி மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.67 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கு மறு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தொழில்நுட்ப அங்கீகார குழுவில் அங்கீகாரமும் பெறப்பட்டது. தொடர்ந்து இந்தமறுப்பீடு நிதித்துறையின் இறுதி ஒப்புதலுக்காக கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு ரூ.5 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி 17.2.2021-ல் ஒப்புதல் வழங்கியது.

விரைந்து செயல்படுத்த வேண்டும்

ஆனால் சிப்காட் நிலங்கள் 21.66 ஏக்கர், தனியார் எண்ணெய் நிறுவன நிலங்கள் 9.23 ஏக்கர், பட்டா நிலங்கள் 13.30 ஏக்கர், அரசு புறம்போக்கு நிலங்கள் 3.10 ஏக்கர் என மொத்தம் 47.29 ஏக்கர் நிலங்களை இன்னும் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த வில்லை. மாநில சுற்றுச்சூலுல் அனுமதியையும் பெற வில்லை. இதனால் இந்த திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே நிலம் கையகப்படுத்தும் பணியையும், மாநில சுற்றுச்சூழல் அனுமதியையும் பெற்று இந்த அருவா மூக்கு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு இந்த திட்டத்தை செயல்படுத்தினால், குறிஞ்சிப்பாடி, கடலூர் தாலுகா பகுதிகள் மழை வெள்ள காலங்களில் பாதிக்காமல் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும்.குறிப்பாக விவசாய பொருட்கள், மனித உயிர்கள், கால்நடைகள் சாவில் இருந்து தப்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Next Story