முல்லைப்பெரியாறு அணை: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்
முல்லைப்பெரியாறு அணையில் இரவு நேரத்தில் தண்ணீரை திறந்துவிட வேண்டாம் என மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
திருவனந்தபுரம்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில், முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணையில் 2 ஷட்டர்களில் இருந்து தண்ணீரை திறந்துவிடப்போவதாக தமிழக அதிகாரிகள் திடீரென அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால், அதிகாலை 5 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் மேலும் சில ஷட்டர்களை திறந்தனர்.
இந்தநிலையில், இன்று (நேற்று) அதிகாலை 3 மணியளவில், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காமல் அணையில் 8 ஷட்டர்களை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். முதலில், 6 ஆயிரத்து 413 கனஅடி நீரை திறந்து விட்டனர். அதிகாலை 4 மணிக்குள் 10 ஷட்டர்களையும் திறந்து 8 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டனர்.
இதனால், அணையை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. அங்கு வசிக்கும் கேரள மக்கள் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். ஆகவே, முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காமலும், இரவு நேரத்திலும் தண்ணீரை திறந்து விடுவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் (மு.க.ஸ்டாலின்) உத்தரவிட வேண்டும். முன்கூட்டியே தகவல் தெரிவித்து, பகல் நேரத்தில் தண்ணீரை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story