சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் அமைச்சர் உறுதி


சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 3 Dec 2021 1:49 AM IST (Updated: 3 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

பூந்தமல்லி,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அய்யப்பன்தாங்கல், மவுலிவாக்கம், பரணிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் அதிக அளவில் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரூர் ஏரியும் நிரம்பியதால் மவுலிவாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது.

இந்தநிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று போரூர் ஏரியை பார்வையிட்டார். பின்னர் மவுலிவாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நிற்பதையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: -

ஆக்கிரமிப்புகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர்வரத்து, வெளியேற்றுவது, கலங்கள் கால்வாய் பகுதிகள் பெருவாரியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போரூர் ஏரியின் நடுவே ஒருவர் மாளிகை கட்டி சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளார்.

இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் ஒரு வார காலத்தில் அகற்றவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறி உள்ளனர். ஒரு வார காலத்தில் இது முடியும் என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அதை ஒரு தலையாய கடமையாக எடுத்து வெள்ளம் வடிய, வடிய ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும். போரூர் ஏரியை தூர்வாரி சுத்தம் செய்யவும் முதல்-அமைச்சரிடம் கூறி தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 142 அடி மட்டும் தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் அளவுக்கு மீறி நீர் வரத்து உள்ளது. இரவில் வரும் நீர் ஒரு அளவு என்றால் நள்ளிரவில் வரும் நீரின் அளவு அதிகரிக்கிறது.

அப்போது அப்படியே விட்டுவிட்டால் 146 அடி வரை சென்று விடும். அது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியதாக ஆகிவிடும். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக கண்ணும், கருத்துமாக இருந்து அணையில் இருந்து நீரை திறந்து விடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் இருந்தனர்.

Next Story