சென்னையில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார்


சென்னையில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 3 Dec 2021 3:56 AM IST (Updated: 3 Dec 2021 3:56 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் தொழில் வளாக உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்தும் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சியை சென்னையில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்படாமல் இருந்த சர்வதேச எந்திர கருவிகள் (மெஷின் டூல்ஸ்) கண்காட்சி, வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக அம்பத்தூர் தொழில் வளாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.என்.கிரீஷன், கண்காட்சி தலைவர் ஆர்.எஸ்.எஸ்.சதீஷ்பாபு ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சியான ‘அக்மீ 2021' சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 405 நிறுவனங்கள் பங்கு பெற பதிவு செய்து இருக்கின்றன. அவற்றில் 100 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இந்திய முகவர்களின் வாயிலாக பங்கேற்க உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு நாளும் இந்த கண்காட்சியை பார்க்கலாம்.

ஆன்லைன் மூலமும் பார்க்க முடியும்

இந்த கண்காட்சி மூலம் எந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பத்தில் நடந்து வரும் சமீபத்திய முன்னேற்றங்களை உள்ளூர் தொழில் முனைவோர்களும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களும் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும். நேரடியாக பார்க்க முடியாதவர்கள் உலகில் எந்த பக்கத்தில் இருந்தாலும் ஆன்லைன் மூலமாகவும் இந்த கண்காட்சியை 3டி வடிவில் பார்க்கலாம்.

இதில் எந்திர கருவிகள் தொழில்நுட்பத்தின் தற்போதைய பயன்பாடு, அவற்றில் வந்திருக்கும் முன்னேற்றங்கள், தொழில்துறை ரோபோடிக் உள்பட பல்வேறு கருவிகள் தொடர்பான நேரடி விளக்கங்களும், புதிய கருவிகளின் அறிமுகங்களும் கூட நடைபெறும்.உலக அளவில் வளர்ந்து வரும் எந்திர கருவிகள் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க போகிறது. அதன் காரணமாக எந்திர கருவிகளின் உற்பத்தி பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எந்திர கருவிகளை அதிகம் பயன்படுத்துவது வாகன உற்பத்தி துறைதான். அதன்படி அவற்றின் வர்த்தகம் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி அளவுக்கு உயரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story