டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 3 Dec 2021 2:54 PM IST (Updated: 3 Dec 2021 2:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி எனும்  அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தல் நிரப்பப்படுகின்றன. 

இதற்காக அரசுத்துறைகளில் உள்ள  காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப  தேர்வுகளை டி.என்.பி.எஸ். சி நடத்தி வருகிறது. இந்த நிலையில்,  தமிழகத்தில் அரசுப்பணிகளில் சேர தமிழ்மொழி கட்டாயம் என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டது. 

 தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது,  

தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வுகள் அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்படுகிறது. 
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தொகுதி-I. II மற்றும் IIA ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டதாக உள்ள தொகுதி 1, 11 மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது. முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.

மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இத்தேர்வு 100 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். 

ஒரே நிலை கொண்ட தேர்வுகளின் (தொகுதிIII  மற்றும் IV) நடைமுறைகள் விவரம்.

தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள  தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும்.  தமிழ் மொழித்தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும். இத்தமிழ்மொழித்தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி- அ எனக் கொள்குறி வகையில் அமைக்கப்படும். 

பகுதி- அ , அளவில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, பகுதி ஆ வில் எழுதியதேர்வுத்தாளும் இதர தாளும் மதிப்பீடு செய்யப்படும். 

ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் இதர தெரிவு முகமைகளை பொருத்தவரையில்  கட்டாய தமிழ் மொழித்த தகுதி தேர்வினை நடத்துவது தொடர்பாக மேற்படி வழிகாட்டு நெறிமுறிகளை  சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளால் வெளியிடப்படும். 

தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களை பொருத்தவரையில் தேவையான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை நிதித்துறையால் வெளியிடப்படும் 

Next Story