அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி: வேட்புமனு வாங்க வந்த நிர்வாகி ஓட ஓட விரட்டியடிப்பு


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி: வேட்புமனு வாங்க வந்த நிர்வாகி ஓட ஓட விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 3:55 PM IST (Updated: 3 Dec 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பமனு கேட்ட அ.தி.மு.க. நிர்வாகி தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நாளை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் எனவும், வரும் 5 ஆம் தேதி காலை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சியின் உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் அடித்து வெளியேற்றப்பட்டார். சென்னையை சேர்ந்த பிரசாந்த் சிங், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. நிர்வாகிகள் தனக்கு விருப்ப மனு தர மறுப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை அங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமபொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வோர் மட்டுமின்றி முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்கள் ஆகியோரும் 5 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என விதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓமபொடி பிரசாத் சிங் புகார் அளித்துள்ளார்.

Next Story