தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய வேனை விரட்டிப் பிடித்த போலீசார்
பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய வேனை போலீசார் விரட்டிப் பிடித்து, டிரைவரை கைது செய்தனர்.
பாகூர்
பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய வேனை போலீசார் விரட்டிப் பிடித்து, டிரைவரை கைது செய்தனர்.
ரோந்து பணி
தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதை தடுக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பின்னாச்சிக்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கூண்டு வைத்த வேனை நிறுத்துமாறு போலீசார் கைகாட்டினர். போலீஸ் நிற்பதை கண்ட டிரைவர், வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஜீப்பில் வாகனத்தை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர்.
பதுக்கி வைத்திருந்த மணல்
சுமார் 5 கிலோ மீட்டர் பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்த நிலையில், புதுச்சேரி - கடலூர் சாலை கன்னியக்கோவில் நான்குமுனை சந்திப்பில் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 28) என்பதும் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங் கரையோரம் மழை வெள்ளத்துக்கு முன் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த மணலை அள்ளிக்கொண்டு தமிழக பகுதிக்கு கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. கூண்டுவேனில் மணல் எடுத்துச்சென்றால் போலீசாரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இந்த நூதன முறையில் மணல் கடத்தியது தெரியவந்தது.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணல் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சூர்யா மீது ஏற்கனவே பாகூர் போலீசில் மணல் கடத்தல் வழக்கு உள்ளது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறுகையில், தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story