சென்னையில் தலைமைச்செயலகம், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னையில் தலைமைச்செயலகம், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 4 Dec 2021 4:39 AM IST (Updated: 4 Dec 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தலைமைச்செயலகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரெயில்வே முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னையை அடுத்த மதுராந்தகம் ரெயில் நிலைய மேலாளருக்கு நேற்று மாலை கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், சென்னை தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையம், மேல்மருவத்தூர் ரெயில் நிலையங்களில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதியிருந்தது.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நிலைய மேலாளர், உடனடியாக ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அதையடுத்து ரெயில்வே போலீசார், தலைமைச்செயலகம், கிண்டி கவர்னர் மாளிகை போலீசாருக்கும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவலை தெரிவித்தனர். தகவலின் பேரில் தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகையில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல்

அதேபோல் எழும்பூர் ரெயில் நிலையம், மேல்மருவத்தூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் மோப்பநாய், ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தினர். எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமயிலான போலீசார், பார்சல் அலுவலகம், கார் பார்க்கிங், ரெயில் தண்டவாளங்கள், ரெயில் பெட்டிகள், பயணிகள் காத்திருக்கும் அறைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின் பேரில், மர்ம கடிதம் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

அந்த விசாரணையில், கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கங்காதரன் (60) என்பதும், ரெயில்வே ஓய்வுபெற்ற ஊழியர் என்பதும் தெரியவந்தன. அதையடுத்து ரெயில்வே போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் நேற்று 4 இடங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story