இனி வரும் காலங்களில், எந்த அரசு தேர்வாக இருந்தாலும், அடிப்படை தமிழ் புலமை அவசியம்- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டில் அரசு காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பும் அளவுக்கு நிதி இல்லை என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில், தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதுகுறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இனி வரும் காலங்களில், எந்த அரசு தேர்வாக இருந்தாலும், அடிப்படை தமிழ் புலமை அவசியம்.
தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்து தேர்வானால் மட்டுமே அரசுப் பணி கிடைக்கும்.
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில், 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
தமிழ்நாட்டில், தமிழக மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தேவை என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் சில பணியிடங்களில் தமிழ் தெரியாத, வெளிமாநிலத்தவர்கள் அரசு பணியில் அமர்த்தப்பட்டனர்.
கடந்த ஆட்சியில் நேரிட்ட தவறை சரிசெய்யவே, தமிழ் மொழி கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தில் நம் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் .
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்காக 14 முதல் 15 லட்சம் பேர் வரை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் தற்போது 10 லட்சத்திற்கும் குறைவானவர்களே அரசு பணியில் இருக்கிறார்கள். மீதம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் அளவுக்கு தமிழக அரசிடம் நிதி இல்லை. அரசு தேர்வு எழுதுவோருக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்பட உள்ளது.
இன்னும் சில வாரங்களில் அரசுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். டிஎன்பிஎஸ்சி-யை பொறுத்தவரையில் பல்வேறு பணிகளுக்கு சுமார் 80 தேர்வுகள் வரை நடத்த வேண்டியுள்ளது. இத்தனை தேர்வுகள் அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது.
இத்தனை தேர்வுகள் நடத்துவது சாத்தியம் என்றால், அதற்கான முன்னேற்பாடுகள் எந்தவகையில் இருக்கும் என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும். இது தொடர்பாக பல விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தற்போதுள்ள தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story