புதுவையில் பாரதியாருக்கு பிரம்மாண்ட சிலை கவர்னர் தமிழிசை விருப்பம்
புதுவையில் பாரதியாருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருப்பம் தெரிவித்தார்.
புதுச்சேரி
புதுவையில் பாரதியாருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருப்பம் தெரிவித்தார்.
தொழில்முனைவோர் கூட்டம்
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சன்வே ஓட்டலில் சுற்றுலா தொழில்முனைவோர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் விக்ராந்த் ராஜா முன்னிலை வகித்தார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக மாறவேண்டும். அமைச்சர் லட்சுமிநாராயணன் அமைதியாக இருந்து சாதித்து வருகிறார். கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மேலாண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் அரசு செயல்பட்டது.
புதுவையைப்பற்றி எனக்கு மிகப்பெரிய கனவு உள்ளது. பல திட்டங்களை தற்போது நிறைவேற்றி உள்ளோம். சில திட்டங்களை பிரதமரிடமும் கூறியுள்ளோம். சுற்றுலாவால் தீவிரவாதத்தை முறியடிக்க முடியும் என்று பிரதமரும் கூறியுள்ளார். சுற்றுலாவுக்கு தேவையான இயற்கை வளம் நம்மிடம் உள்ளது.
டெரகோட்டா பார்க்
ஆன்மிகம், மருத்துவம், கல்வி என்று சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். திறமைசாலிகளை பிரதமர் கவுரவப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளார்.
புதுவையில் டெரகோட்டா பார்க் அமைக்கும் திட்டம் உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து பார்ப்பார்கள். இதேபோல் பிலிம்சிட்டி ஒன்றையும் உருவாக்கவேண்டும். இப்போது சிந்துபாத் கதை போன்று மெகா சீரியல்களும் உருவாக்கப்படுகிறது. அந்த சீரியல்கள், திரைப்படங்களை இங்கு வந்து படமாக்குவார்கள். இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
பாரதியாருக்கு சிலை
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல் பாரதியாருக்கு ஒரு பிரம்மாண்ட சிலையை கடற்கரையில் வைக்கலாம். உலக தமிழர்கள் அதற்கு உதவுவார்கள். சுற்றுலாத்துறைக்கு என்று ஒரு கொள்கை இருக்கவேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம், காரைக்காலில் இருந்து இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடர்பாக மத்திய அரசிடம் பேசி உள்ளோம். சுற்றுலா முதலீட்டாளர்களுக்கு ஒற்றை சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் வழங்க வேண்டும்.
மழை பாதிப்பிலிருந்து மக்கள் தற்போதுதான் மீண்டு வருகிறார்கள். இதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருப்பேன். அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு ஒரு காலக்கெடு விதித்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
லட்சுமிநாராயணன்
அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-
கடந்த 6 மாதங்களாக அரசு, இரட்டை என்ஜின் வேகத்தில் செயல்படுகிறது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் தான் காரணம். சின்னவீராம்பட்டினம் கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து பெற்றுள்ளோம். இதில் மத்திய அரசின் பங்கும் உள்ளது. சுற்றுலா தொடர்பாக ரூ.140 கோடி திட்டங்களில் ரூ.124 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
புதுவையில் உள்ளது போல் அழகிய கடற்கரை வேறெங்கும் இல்லை. விரைவில் நீர் விளையாட்டு கொண்டுவரப்படும்.
சுற்றுலா திட்டங்கள்
மழையால் புதுவையில் உள்ள 84 ஏரிகளும் நிரம்பி உள்ளன. ஏரிகளை சுற்றுலா தலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பனித்திட்டில் 100 ஏக்கரில் சுற்றுலாவை மேம்படுத்த உள்ளோம்.
புதுவையில் 400 ஏக்கர் நிலம் கொடுத்தால் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சுற்றுலா திட்டங்களை தர மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்காக சரியான இடத்தை தேர்வு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ராமச்சந்திரன், முதலியார் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story