நெல்லையில் மருத்துவ மாணவிகள் உள்பட 3 பேர் பலி


நெல்லையில் மருத்துவ மாணவிகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 4 Dec 2021 11:24 PM IST (Updated: 4 Dec 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், மொபட் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கார்-மொபட் மோதல்

தென்காசி மாவட்டம் ஆவுடையானூரை சேர்ந்த திவ்ய காயத்ரி (வயது 21), கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் தெற்குவிளை தெருவை சேர்ந்த கருப்பையா மகள் திவ்ய பாலா (21), மதுரை பரசுராமன்பட்டி சங்கர்நகரை சேர்ந்த ரோஸ்லின் பிலிப் மகள் பிரிடா ஏஞ்சலின் ராணி (23) ஆகிய 3 பேரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று காலையில் ஒரு மொபட்டில் 3 பேரும் நெல்லை நான்கு வழிச்சாலை ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது எதிரே சாலையில் ஒரு கார் வந்தது. அந்த காரின் டயர் திடீரென்று வெடித்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி சென்றதுடன், மாணவிகள் வந்து கொண்டு இருந்த மொபட் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.



2 மாணவிகள் பலி

இந்த கோர விபத்தில் மொபட்டில் சென்ற மாணவிகள் திவ்ய காயத்ரி, பிரிடா ஏஞ்சலின் ராணி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். திவ்ய பாலா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். மேலும் காரில் இருந்தவர்களும் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர்.

இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து சென்றனர். மேலும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த 3 பேரையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த மாணவி உள்பட 4 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பூக்கடைக்காரர் சாவு

ஆனால், செல்லும் வழியிலேயே ஒருவர் பலியானார். அவர் குமரி மாவட்டம் கோட்டாறு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (41) என்பதும், கோட்டாறில் பூக்கடை நடத்தி வந்ததும், தி.மு.க. நிர்வாகியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது.

படுகாயம் அடைந்தவர்களில் கார் டிரைவரான சுசீந்திரத்தை சேர்ந்த சந்தோஷ், தேரூரைச் சேர்ந்த பெருமாள் (47) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. பலியான மாணவிகளின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதற்கிடையே, மாணவிகள் 2 பேர் இறந்த தகவல் அறிந்தவுடன் சக மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அங்கு மாணவிகளின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. விபத்தில் பலியான திவ்ய காயத்ரியின் தந்தை பொன்னுதுரை வேளாண்மை துறை அதிகாரி ஆவார்.


Next Story