பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை அதே பள்ளியில் பணியமர்த்த வலியுறுத்தி பெற்றோர்கள் போராட்டம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை அதே பள்ளியில் பணியமர்த்த வலியுறுத்தி பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் அருகே உள்ள பாகநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பன்னீர்செல்வம் (வயது 48). இவர் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் அந்த பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் ரமணி மற்றும் வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் பன்னீர்செல்வம் தவறான நபர் இல்லை எனவும், பிறர் தூண்டுதலின் பேரில் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே ஆசிரியர் பன்னீர்செல்வத்தை அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்றனர்.
இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் ரமணி இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறு கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தனர். பிறகு வட்டார கல்வி அலுவலர் இக்கடிதம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும். பின்னர் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொள்ளும் போது இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்கலாம் என கூறினார்.
இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story