கோவை வேளாண்பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம்


கோவை வேளாண்பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2021 4:21 AM IST (Updated: 5 Dec 2021 4:21 AM IST)
t-max-icont-min-icon

கோவை வேளாண்பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதன் உறுப்பு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயின்று வரும் இளங்கலை மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் அரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று தேர்வு எழுதிய மாணவர்களில் சுமார் 80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.இதனால் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள்அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் நேற்று வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் கூறியதாவது:- .கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பித்த அரியர் தேர்வுக்கு இந்த ஆண்டு தான் தேர்வு நடத்துகிறார்கள். செய்முறை தேர்வு கல்லூரிகளில்தான் நடத்தப்பட்டது. அதிலும் முறைகேடு என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே அனைத்து மாணவர்களுக்கும் எழுதிய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அடையும் வகையில் வழிவகை செய்யவேண்டும்.

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். ஆகவே அவர்களின் எதிர்காலம் பாதிப்படையாமல் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மறு தேர்வு

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்ததும், மாணவர்களை அழைத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், ஆன்லைனில் அரியர் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் நிர்வாக தரப்பில் மறுதேர்வு நடத்தலாம் என்றனர். இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story